Tuesday, August 23, 2011

ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி


ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால் பாசனம் வழியாக செயல்படுத்தப்பட்டு வந்த 20 எம்.ஜி.டி. திட்டம் மாற்று வழியில் குழாய் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் வாழைப்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டதையடுத்து, மாவட்ட கலெக்டரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறப்பதற்காக, குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் மோட்டாரை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டு, வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வடகால் வழியாக தூத்துக்குடிக்கு 20 எம்.ஜி.டி. தண்ணீர் எடுத்துச்செல்லப்பட்டு வந்தது. தற்போது ராட்ஷச குழாய் மூலம் அணைக்கட்டுப்பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் வடகால் வாய்க்காலில் தண்ணீர் செல்லவில்லை. இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 12 ஆயிரத்து 500 ஏக்கர் வாழைப்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாழைப்பயிர்களை காப்பாற்ற குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் திட்டத்தை கைவிட்டு, வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறக்கவேண்டும் என்று தாமிரபரணி வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் டி.உதயசூரியன் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் கடந்த திங்கட்கிழமை காலை குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் திட்டத்தை ஆய்வு செய்தார்.

அப்போது, குழாய் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதால் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளதை அதிகாரிகள் கலெக்டரிடம் சுட்டிக்காட்டினர். இதையடுத்து நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில் வடகால் பாசன சங்க போராட்டக்குழு தலைவர் கி.கந்தசாமி, தாமிரபரணி வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் டி.உதயசூரியன், பேய்க்குளம் விவசாயிகள் சங்க செயலாளர் குணசேகரன் மற்றும் விவசாயிகள் வடகாலில் தண்ணீர் திறக்க வலியுறுத்திப் பேசினர்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வி தலைமையில், வடகால் பாசன சங்க போராட்ட குழு தலைவர் கி.கந்தசாமி முன்னிலையில் விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், 300 க்கும் மேற்பட்ட மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். 

இந்த பேச்சுவார்த்தையில் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தண்ணீர் எடுக்கும் மோட்டார்களில் ஒன்றை இயக்காமல் தற்காலிகமாக 15 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதென்றும் வடகால் வாய்க்காலில் 150 கன அடி தண்ணீர் திறந்துவிடுவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் வடகால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment